சஷ்டி விரதம் வீட்டில் இருப்பது எப்படி?- கோயிலில் இருக்க என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் தெரியுமா?

குழந்தை அருள் உட்பட 16 சம்பத்துகள் எனும் செல்வங்களைப் பெற முருகனின் அருளால் பெற கந்த சஷ்டி விரதம் இருப்பது அவசியம். கந்த சஷ்டி விரதம் எப்படி இருப்பது, வீட்டில் விரதம் இருக்க நினைப்பவர்கள் என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பனவற்றைப் பார்ப்போம்…

கந்த சஷ்டி என்பது ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சஷ்டி நாட்களையும் குறிக்கும். அதே போல் தீபாவளி முடிந்த பின் வரும் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள 6 நாள் விரத நாட்களை மகா சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம்.

பிரதமை தினத்தில் தொடங்கும் இந்த சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் வரை 6 நாட்கள் மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கக் கூடிய விரத நாளாகக் கொண்டாடப்படுகின்றது.
மகா சஷ்டி விரதம் 6 நாட்கள் இல்லை 7 நாட்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

சஷ்டி என்றால் என்ன?

சஷ்டி என்பது முருகப்பெருமான் சூரனுடன் 6 நாட்கள் போர் செய்து இறுதியில் அவரை சம்ஹாரம் செய்ததைக் குறிக்கும் விதமாக விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

வதம் – சம்ஹாரம் வித்தியாசம் என்ன?

வதம் என்றால் கொல்லுதல் என்று பொருள்.
சம் என்றால் நல்ல, ஹாரம் என்றால் ஒடுக்குதல் என்று பொருள். ஒரு கொடியவனிடம் இருக்கும் தீய குணங்களை ஒடுக்கி, அவனிடம் இருக்கும் நற்குணங்களை வாழவைத்து, ஒரு கொடியவனை அடியவனாக மாற்றுவதற்கு சம்ஹாரம் என்று பெயர்.

சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

பெரும்பாலும் சஷ்டி விரதம் இருப்பவர்கள் கோயிலில் சென்று அங்கேயே தங்கி இருப்பது வழக்கம். அப்படி விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகள், ஆறு, கடல் ஆகியவற்றில் தினமும் நீராடி விரதத்தை மேற்கொள்வது வழக்கம்.

ஆயிரக்கணக்கானோர் திருச்செந்தூரில் கோயிலிலேயே தங்கி விரதம் மேற்கொள்வது வழக்கம். இவர்கள் தினமும் காலையில் கடலில் குளித்து, பின்னர் அங்குள்ள நாளி கிணற்றிலும் குளித்து முருகப்பெருமானை தரிசித்து விரதத்தை தொடங்க வேண்டும்.

கோயிலில் விரதம் இருக்க முடியாதவர்கள், அருகில் ஏதேனும் விடுதியில் தங்கி, அதை கடைப்பிடிக்கலாம். இருப்பினும் அனைவருக்கும் விரத முறை ஒன்றே.

சஷ்டி விரதத்தின் மகிமை:

பெரும்பாலும் குழந்தை வரம் பெற சஷ்டி விரதம் இருப்பது நல்லது என கூறுவர். ஆனால் அப்படி இல்லை பல்வேறு செல்வங்களை அள்ளித்தர வல்ல முருகப்பெருமானை சரணடைவதற்கு இந்த விரதம் ஏற்றது.

குழந்தை வரம், நல்ல வேலை கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வரன் அமைய வேண்டும், ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கையை என 16 சம்பத்துகளையும் வேண்டி இந்த விரதம் இருக்கலாம்.


நம்பிக்கையோடு முருகப்பெருமானை எண்ணி விரதம் இருந்தால், குழந்தை வரம் மட்டுமல்லாமல், அனைத்து வகை செல்வங்களையும் முருகப்பெருமான் நமக்கு அருளச் செய்வார்.

வீட்டில் விரதம் இருப்பது எப்படி?

கோயிலில் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே இருந்து விரதம் இருக்கலாம்.
சாப்பிடாமல் இறைவனை எண்ணி இருப்பது தான் விரதம் என்று பெயர்.
அப்படி சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் கோயிலில் கொடுக்கப்படும் பால், பழம் சாப்பிடலாம், தேன் திணைமாவு என கொடுக்கும்பிரசாதத்தை வாங்கி சாப்பிடலாம்.

கோயிலுக்குச் சென்று விரதம் இருக்க முடியாதவர்கள், வீட்டிலேயே விரதம் இருக்க விரும்புபவர்கள், காலை மற்றும் மாலையில் வீட்டருகில் உள்ள முருகன் திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும். வீட்டருகில் முருகன் கோயில் இல்லை அல்லது வெளிநாட்டில் இருக்கின்றீர்கள் என்றால் வீட்டிலேயே முருகனின் புகைப்படம், சிலையை வைத்து நெய் விளக்கு ஏற்றி வணங்கி விரதத்தை மேற்கொள்ளலாம்.

விரதத்தின் போது செய்ய வேண்டியவை:

விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும்.

பாராயணம் செய்ய வேண்டியவை:
கந்த சஷ்டி கவசம்
அருணகிரி நாதரின் திருப்புகழ்
கந்தர் அலங்காரம்
கந்தர் அந்தாதி
பாம்பன் சுவாமி அருளிய சண்முக கவசம்
குமாரஸ்துவம்
பகை கடிதல் ஸ்தோத்திரம்
ஆகியவற்றை நாம் பாராயணம் செய்யலாம்.

குழந்தை வரம் வேண்டி விரதம் இருப்பவர்கள் பாராயணம் செய்ய வேண்டிய முக்கிய பாடல்
திருப்புகழ் பாராயணம்:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப… முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த … பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி… லுறவாடி

மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி… தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க… வருநீதா

முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த… குருநாதா

தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்… முருகோனே

தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த… பெருமாளே.

இந்த திருப்புகழ் பாடல் உண்டு. இந்த சுவாமி மலை பாராயணம் செய்யலாம்.

யார் விரதம் இருக்க வேண்டும்?
குழந்தை விரதம் வேண்டுபவர்கள் கணவன் – மனைவி சேர்ந்து தான் விரதம் இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்னை, மருந்து, மாத்திரை எடுக்க உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், யாரேனும் ஒருவர் விரதம் இருக்கலாம்.

விரதத்தின் போது தூங்கலாமா?
விரதத்தின் போது தூங்கலாம் ஆனால் இரவில் மட்டும் தான். விரதத்தின் போது பகலில் தூங்கக் கூடாது. தூக்கம் வருகிறதென்றால் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கின்றீர்களோ அந்தகடவுளின் பாடல்களை பாராயணம் செய்யலாம்.

முருகனுக்கான விரதத்தின் போது முருகப்பெருமானின் பாடல்களை பாராயணம் செய்தலும், கந்த புராணம் படிக்கலாம், ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை எழுதலாம். அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வரலாம்.

6நாள் அல்ல 7 நாள் விரதம்:
சூரசம்ஹாரம் ஆன உடன் குளிக்க வேண்டும். குளித்த பின் ஒரு டம்ளர் பால் எடுத்துக் கொள்ளலாம். அடுத்த நாள் முருகனுக்கு நடக்கும் திருக்கல்யாணத்தைப் பார்த்து, அதன் பின்னர் தான் சாப்பிட வேண்டும்.

வீட்டிலிருந்து விரதம் இருப்பவர்கள், திருக்கல்யாணம் முடிந்ததும், வீட்டிலேயே மிக சிறப்பாக தயிர் சாதம் செய்து, அதை கொதிக்க கொதிக்க ஒரு வாழை இலையில் பரப்பி, படைக்கலாம்.

முருகனை குளிர்வித்த பிறகு, உங்களின் பிரார்த்தனைகளை வைக்கவும். குழந்தை வேண்டுபவர்கள், உன்னைப் போல ஒரு குழந்தை எங்கள் வீட்டிலும் தவழ வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். உங்களின் கோரிக்கையை முருகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார்.

ஓம் சண்முகாய நமஹ
ஓம் சரவண பவ…